முந்தைய திமுக ஆட்சியில் அவசர அவசரமாகத் தொடங்கப்பட்ட மீன்வளத்துறை திட்டப் பணிகள் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மீண்டும் செயல்படுத்தப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் இன்று (31.10.2026), ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வேப்பலோடை ஊராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி, கோவில்பட்டி, நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வேப்பலோடை ஊராட்சி, பாண்டியாபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.75.43 இலட்சம் மதிப்பீட்டில் பாண்டியாபுரம், ஜெகவீரபாண்டியாபுரம், நெடுங்குளம் ஆகிய கிராமத்தில் நியாய விலைக்கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், 2 வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொது விநியோக சேவைகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிம வள நிதி மற்றும் பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடத்தினையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், நாலாட்டின்புத்தூர் கேஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 வகுப்பறை கட்டடத்தையும், அதேப்பள்ளியில் 15 ஆவது நிதிக்குழு மானியம், திட்டத்தின் கீழ் தலா ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கழுகுமலை கயத்தாறு, ஆகிய பேரூராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்டடத்தினையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத் கூறியதாவது: "கடந்த திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மீன்வளத் துறையில் அவசர அவசரமாகத் தொடங்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் குறித்து மீனவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து கலந்தாலோசிக்கப்படும்.

அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு, மீனவர்களுக்குப் பயன்படும் வகையில் திட்டங்களை மறுசீரமைத்து மீண்டும் தொடங்கவுள்ளோம். மேலும், மீனவப் பெண்களுக்கு மீன்வளம் சார்ந்த பயிற்சிகளையும், அவர்கள் சிறுகுறு தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.

srinathXpress.jpg

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), திருநெல்வேலி மண்டலம் சுஷம்மா, உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அயன்ராஜ், செயல் அலுவலர்கள் சுப்பிரமணியன் (விளாத்திகுளம்), அசோகன் (கழுகுமலை) மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.