தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர் அருகே உள்ள நரசன்விளையில் சமுதாயநலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசை நேரில் சந்தித்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து தங்கள் பகுதியில் சமுதாயநலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயநலக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அரசு சார்பில் ரூ.25 லட்சமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டு கட்டிடப்பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. தெற்கு ஆத்தூர் முன்னாள் பஞ்., தலைவர் சதிஷ் வரவேற்றார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து புதிய சமுதாயநலக்கூடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் நரசன்விளை கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தக்குமார், புதுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.