குற்றவாளிகளின் கூடாரமாக தவெக அரசு திகழ்கிறது என்று தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் கலந்து காெண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது தவெக ஆட்சியில் பெண்கள், குழநதைகளுக்கு பாதுகாப்பு இல்லை. டம்மி சிஎம் போல காவல்துறையும் டம்மியாகிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக தவெக அரசு திகழ்கிறது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெசி பொன் ராணி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் கவிதா கந்தகுமார், ராமலட்சுமி சங்கர், சாரதா பொன் இசக்கி, தயாநிதி வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டக் கழக, கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டு அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.