கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கார் ஓட்டுநர் கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (63). இவரது மனைவி சண்முக லட்சுமி (59). இத்தம்பதியினர் தங்களது மகன் சித்துராஜுடன், சங்கரன்கோவில் அருகே உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரைச் சித்துராஜ் ஓட்டியுள்ளார்.

கழுகுமலை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு காருடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீவானந்தம் மற்றும் சண்முக லட்சுமி ஆகிய தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த சித்துராஜ் மற்றும் எதிரே காரை ஓட்டி வந்த நாலாட்டின்புதூர் வி.பி. சித்தன் நகரைச் சேர்ந்த வைரவன் மகன் கரண் (27) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டுத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்குச் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கார் ஓட்டுநர் கரண், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.