தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்குத் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில், அவருக்கு ரூ.2 லட்சம் கடன் ஒப்புதலாகி உள்ளதாகவும், அதனைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி மற்றும் பரிவர்த்தனை கமிஷன் தொகையாக ரூ.1.90 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், லோன் தொகை கணக்கில் சேர்ந்த பிறகு இந்த முன் பணம் மீண்டும் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர், கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ செயலிகள் மூலம் பல தவணைகளாக மொத்தம் ரூ.1.95 லட்சத்தை மர்ம நபர்களின் கணக்கிற்குச் செலுத்தியுள்ளார்.
ஆனால், பல நாட்கள் ஆகியும் அவரது வங்கி கணக்கில் லோன் தொகையோ அல்லது அவர் செலுத்திய முன்பணமோ திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இது குறித்துச் சைபர் கிரைம் இணையதளப் போர்ட்டலில் ஆன்லைனில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

