திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்துச் சரகக் காவல் துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று (30.10.2026) நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் காவல் நிலையத்திற்குத் திடீரெனச் சென்ற டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு, அங்குள்ள வரவேற்புப் பிரிவு, வழக்குக் கோப்புகள், குற்றப்பத்திரிகை பதிவேடுகள் மற்றும் காவல் நிலையப் பராமரிப்பு நிலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்குப் பணி தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்ட அவர், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துக் கேட்டறிந்து, பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

