தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களுக்குத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக் கோரி, சி.ஐ.டி.யு இணைப்பான ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 2(D) 62-ன் படி, தினக்கூலித் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 832/-, ஓட்டுநர்களுக்கு ரூ. 950/- வீதம் வழங்க வேண்டும்.
பி.எஃப் பிடித்தம் தொழிலாளர்களின் கணக்கில் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். காலை உணவுப்படியாக ரூ. 100 வழங்கப்பட வேண்டும்.தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட மாநகராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் நேரடியாக ஒரு மாத ஊதியத்தைப் போனஸாக வழங்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வே. கருப்பசாமி தலைமை தாங்கினார். மாநகரக் கிளைச் செயலாளர் இல. இராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் முனியசாமி சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு மாவட்டத் துணைத் தலைவர்கள் காசி, K. சங்கரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சி.ஐ.டி.யு. மாநிலத் துணைத் தலைவர் ரசல் நிறைவுரையாற்றினார். நிறைவாக, மாநகரக் கிளைப் பொருளாளர் ஜான் செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.

