தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி 47 மையங்களில் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2A தேர்வுகளுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தேர்வு நாளன்று காலை 9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II மற்றும் IIA (Group II & IIA) தேர்வுகள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி (01.11.2026) முற்பகல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய 4 வட்டங்களில் மொத்தம் 47 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 12,597 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
வட்ட வாரியாக தேர்வு மையங்கள் விவரம்:
தூத்துக்குடி: 24 மையங்கள் (6,619 தேர்வர்கள்)
கோவில்பட்டி: 13 மையங்கள் (3,667 தேர்வர்கள்)
திருச்செந்தூர்: 8 மையங்கள் (1,766 தேர்வர்கள்)
ஸ்ரீவைகுண்டம்: 2 மையங்கள் (545 தேர்வர்கள்)
பாதுகாப்பு & கண்காணிப்பு ஏற்பாடுகள்:
தேர்வுப் பணிகளுக்காகத் துணை வட்டாட்சியர் நிலையில் 12 இயங்கு குழுக்களும் (Mobile Team), துணை ஆட்சியர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்களும், 5 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், கருவூலத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் மையங்களுக்கு எளிதாகச் சென்று வர அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கண்டிப்பான கட்டுப்பாடுகள் & அறிவுறுத்தல்கள்:
தேர்வர்கள் தேர்வு நாளான 01.11.2026 அன்று காலை 9.00 மணிக்கு முன்னரே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். காலை 9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கூடத்திற்குள் செல்போன், பேஜர், கால்குலேட்டர், Smart Watch, AI Meta கண்ணாடிகள், புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் கைப்பைகள் கொண்டு செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வறையில் அனலாக் (Analog) கைக்கடிகாரம் மற்றும் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா (Black Ballpoint Pen) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபு மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

