தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனுஷ்கோடி தெருவைச் சேர்ந்த மீன்கடை தொழிலாளி ஆனந்த் (35), கார்த்திக் (34) மற்றும் மதியரசன் (31) ஆகியோர் திருநெல்வேலியிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோவில் கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

சவலாப்பேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாகச் சரக்கு ஆட்டோவின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்து பயணித்த ஆனந்த் (35) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ஆட்டோவை ஓட்டி வந்த கார்த்திக் மற்றும் உடன் பயணித்த மதியரசன் ஆகிய இருவருக்கும் லேசான மற்றும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்ட பொதுமக்கள், இருவரையும் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான ஆனந்தின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியார்பட்டியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ராம்கணேஷ் (31) என்பவரிடம் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.