தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குிருஷ்ணன் (51). இவருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே முத்துக்குிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 22.10.2026 அன்று இரவு முத்துக்குிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், அங்குத் தகராறில் ஈடுபட்டு முத்துக்குிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிதா (40) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் மேரி விஜிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த முத்துக்குிருஷ்ணன் மற்றும் அவரது 12 வயது மகன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக தீவிர சிகிச்சையிலிருந்த முத்துக்குிருஷ்ணன், நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
இக்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஞானபிரகாஷ் சம்பவம் நடந்த அன்றே தட்டார்மடம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஞானபிரகாஷ் மீது தமிழ்நாடு காவற் தடுப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் தட்டார்மடம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

