தூத்துக்குடி மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில், அகில உலக தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பத்திநாதபுரத்தில் உள்ள நற்செய்தி நடுவத்தில் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்குப் பல்சமய உரையாடல் பணிக்குழுச் செயலர் தந்தை அருள்பணி. பென்சிகர் லூசன் வாழ்த்துரை வழங்கினார். இப்போட்டிகளுக்கு மேனாள் பேராசிரியை அருள்சகோ. ஜெசி (மரியன்னை கல்லூரி), பேராசிரியை பர்வீன் சுல்தானா (மரியன்னை கல்லூரி) மற்றும் சம்சுதீன் ரியாஜி (ஏ.கே. மகளிர் அரபிக் கல்லூரி) ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் தூத்துக்குடி நகரப் பகுதியில் உள்ள 14 பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவ - மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டதோடு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. மின்னல் அம்ஜத் நன்றியுரையாற்றினார். சுதந்திரராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

