தூத்துக்குடி பேருணியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி பாரதி பாமா (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த முன்தினம் இரவு 9 மணியளவில் பாரதி பாமா தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் ஒரு மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, அந்த ஆசாமி திட்டமிட்டு முன்னால் சென்று கொண்டிருந்த பாரதி பாமாவின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினான். இதனால் நிலைதடுமாறிய பாரதி பாமாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர்.

அவர்கள் சுதாரித்துக் கொண்டு எழுவதற்கு முன்பு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி பாரதி பாமாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்படுத்திய ஆசாமியும், உடந்தையாக வந்தவனும் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்துப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.