பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்செல்வி மற்றும் சந்திரலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவந்தாகுளம் 5-வது தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி செல்வநாயகிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் தங்கப்பன் என்ற வினோத் (39) பார் கேஷியர், மற்றும் ராஜகோபால் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் தேவேந்திரன் (64) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 40 பீர் பாட்டில்கள், 90 குவாட்டர் பாட்டில்கள் என மொத்தம் 130 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், தென்பாகம் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு டாஸ்மாக் கடை அருகில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 720 மது பாட்டில்களைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் தப்பியோடிய நிலையில், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் 2 பேர் கைது:
இதேபோல் புதுக்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் கூட்டம்புலி தேரிரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கள்ளத்தனமாக மது விற்ற முக்காணியைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் மாரியப்பன் (55) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 22 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கூட்டாம்புளி குளத்துக்கரை பகுதியில் மது விற்ற புதுக்கோட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ஜெபத்துரை (37) என்பவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 45 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே இரவில் மட்டும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 917 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

