சாமானிய மக்களைப் பாதிக்கும் கட்டண உயர்வு; விரைவான சேவை, குறைவான கட்டணம் என்பதே அஞ்சல் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்திய அஞ்சல் துறை 2026 ஆகஸ்ட் 1 முதல் சாதாரண பார்சல் மற்றும் விரைவு அஞ்சல் (Speed Post) சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மற்றும் அஞ்சல் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கல்வி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு மேலும் ஒரு பொருளாதாரச் சுமையாக அமையும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண முறையின்படி, 50 கிராமுக்கும் குறைவான பொருட்களை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38 வரையிலும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 500 கிராம் வரையிலான சாதாரண பார்சலுக்கு ரூ.84 வரையிலும், 500 கிராம் விரைவு அஞ்சல் பார்சலுக்கு ரூ.106 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எடை மற்றும் தூரத்தைப் பொறுத்து விரைவு அஞ்சல் கட்டணம் ரூ.38 முதல் ரூ.186 வரை உயர்ந்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வு அடிக்கடி அஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகளையும் அதிகரிக்கும். குறிப்பாக, மாணவர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கும், வேலைவாய்ப்புத் தேடுவோர் முக்கிய ஆவணங்களை அனுப்புவதற்கும், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு மனுக்கள் மற்றும் சட்டரீதியான ஆவணங்களை அனுப்புவதற்கும் அஞ்சல் சேவையை நம்பியுள்ளனர்.

அதேபோன்று சிறு வணிகர்கள், சுயஉதவிக் குழுக்கள், வீட்டிலிருந்தே தொழில் செய்யும் பெண்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களைப் பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் அனுப்ப இந்திய அஞ்சல் துறையைப் பயன்படுத்துகின்றனர்.

பார்சல் கட்டண உயர்வால் அவர்களது தொழில் செலவுகள் அதிகரித்து, இறுதியில் பொருட்களின் விலை உயர்வு மூலம் அதன் சுமை மீண்டும் நுகர்வோரையே சென்றடையும்.

இந்திய அஞ்சல் துறை என்பது வெறும் கடிதம் மற்றும் பார்சல்களை எடுத்துச் செல்லும் வணிக நிறுவனம் அல்ல. நகர்ப்புறம் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை அனைத்து மக்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரசு பொதுச் சேவை அமைப்பாகும். தனியார் கொரியர் நிறுவனங்கள் சேவை வழங்க ஆர்வம் காட்டாத தொலைதூரப் பகுதிகளிலும் அஞ்சல் துறை மக்களுக்குச் சேவை செய்து வருகிறது.

இத்தகைய நிலையில், அரசு அஞ்சல் சேவைகளின் கட்டணங்களைத் தொடர்ந்து உயர்த்தினால், பொதுமக்கள் அதிகச் செலவுள்ள தனியார் கொரியர் நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் உருவாகும். அரசு பொதுச் சேவைகளை வணிகமயமாக்கி, கட்டண உயர்வு மூலம் பொதுமக்களைத் தனியார் சேவைகளைச் சார்ந்திருக்கச் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும்.

அஞ்சல் துறையில் OTP சரிபார்ப்பு, நிகழ்நேர SMS கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் பொதுமக்கள் மீது கூடுதல் கட்டணச் சுமையைத் திணிப்பதற்குப் பதிலாக, விரைவான விநியோகம், பாதுகாப்பான பார்சல் கையாளுதல், உரிய நேரத்தில் பொருட்களைச் சேர்த்தல் மற்றும் வாடிக்கையாளர் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்குதல் ஆகியவற்றில் அஞ்சல் துறை கவனம் செலுத்த வேண்டும்.

அரசு நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே செயல்பட வேண்டும்; தனியார் நிறுவனங்களைப் போல வணிக லாப நோக்கில் செயல்படுவதற்காக அல்ல. பொதுமக்கள் செலுத்தும் கட்டணம் அதிகரிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரமும் வேகமும் அதிகரிக்க வேண்டும். விரைவான சேவை, குறைவான கட்டணம், பாதுகாப்பான விநியோகம் என்பவையே இந்திய அஞ்சல் துறையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

எனவே, 2026 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சாதாரண பார்சல் மற்றும் விரைவு அஞ்சல் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற்று, முன்பு நடைமுறையில் இருந்த குறைவான கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

மாணவர்கள், கிராமப்புற மக்கள், ஏழை எளிய குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய கட்டணச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அஞ்சல் சேவைகளின் தரத்தை உயர்த்துவதுடன், பொதுமக்களுக்கு குறைவான கட்டணத்தில் விரைவான மற்றும் நம்பகமான சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எம்பவர் இந்தியா சார்பில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக ஆ.சங்கர் தெரிவித்துள்ளார்.