தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கித் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென அடையாளம் தெரியாத ஒரு கணக்கிலிருந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் புரோபைல் படமாக வைத்து, அவருக்குத் தொடர்ந்து ஆபாசத் தகவல்கள் வந்துள்ளன. அந்தப் பெண் அந்த கணக்கை Block செய்வதற்குள், அவரது இன்ஸ்டாகிராம் இன்பாக்ஸிற்கு அதிக அளவிலான ஆபாசப் புகைப்படங்கள் வந்து குவிந்துள்ளன.
மேலும், அந்த மர்ம நபர் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து, அதனைப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலருக்கும் அனுப்பி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பேரதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அந்தப் பெண், இது குறித்துத் தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், முதற்கட்டமாக அந்த மர்ம நபரின் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கினர். மேலும், அந்த ஆபாசச் செயலில் ஈடுபட்ட நபரின் ஐ.பி. முகவரியைக் கொண்டு அவரைப் பிடிக்கத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

