தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பெட்ரோல் பங்கில் வைத்துப் பகிரங்கமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40). காய்கறி கடை நடத்தி வந்த இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர்.
பாலமுருகன் இன்று காலை 6.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காகச் சேதுபாதை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், பாலமுருகனைச் சுற்றி வளைத்து அருவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை குறித்துத் தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பாலமுருகனின் அக்கா மகளுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா நடைபெற இருந்ததை முன்னிட்டுச் சோட்டையன்தோப்பு பிரதான சாலையில் பேனர் வைத்திருந்தார். அதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. சுற்றுச்சூழல் அணி நிர்வாகியும் பார் உரிமையாளருமான ரவி என்பவர், தான் நடத்தவிருந்த மாட்டு வண்டிப் போட்டிக்கான பேனரை வைத்துள்ளார். இதில் பார் ரவி வைத்த பேனரில் இருந்த படங்களைப் பார்த்துப் பாலமுருகன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பார் ரவி, தனது கூலிப்படை மூலம் பாலமுருகனைக் கொலை செய்தது தெரியவந்தது.
கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பகுதி மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் சோட்டையன்தோப்பு பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், கொலை நடந்த 1 மணி நேரத்திற்குள் முக்கியக் குற்றவாளியான தி.மு.க. நிர்வாகி ரவி, சிவக்குமார், மணிகண்டன், சிவசந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

