தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II மற்றும் IIA தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (01.11.2026) நடைபெற்றன. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தேர்வு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி II & IIA தேர்வுகள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய 4 வட்டங்களில் மொத்தம் 47 தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன. இத்தேர்வினை எழுத 12,537 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று 10,393 தேர்வர்கள் நேரில் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். 2,204 தேர்வர்கள் (17 சதவீதம்) தேர்வில் பங்கேற்கவில்லை."

தேர்வுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளத் துணை வட்டாட்சியர் நிலையில் 12 இயங்கு குழுக்களும் (Mobile Team), துணை ஆட்சியர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்களும், 5 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி எளிதாக வந்து செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. ஆய்வின் போது தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.