தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகக் கடைகள் அடைக்கப்பட்டதால், ஆங்காங்கே மதுப்பிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது பாட்டில்களைச் ஸ்கேன் செய்து வழங்க வேண்டும் என்றும், பின்னர் காலியான பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும்போது அது சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறைக்குத் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தன.

வழக்கம்போல் மதுபானங்களை வாங்குவதற்காக ஏராளமாக திரண்டு வந்த மதுப்பிரியர்கள், நீண்ட நேரமாகியும் கடைகள் திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆங்காங்கே கடைகளின் முன்பாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தையாபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் நேரில் சென்று கலைந்து போகச் செய்து அப்புறப்படுத்தினர்.

ஒரு சில இடங்களில் கடைகளைத் திறந்த ஊழியர்களும், சிறிது நேரத்திலேயே மீண்டும் பூட்டிவிட்டு வெளியேறினர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் மதுப்பிரியர்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதேவேளையில், உரிமம் பெற்ற பார்கள் வழக்கம்போல் இயங்கின. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது கிடைக்காதவர்கள் அனைவரும் பார்-களில் ஒரே நேரத்தில் குவிந்ததால் அப்பகுதிகளில் கடும் கூட்ட நெரிசலும் பரபரப்பும் காணப்பட்டது.