தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசியல் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என். ஜெகவீரபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35). அதிமுகவைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அழகுபாண்டி உள்ளிட்ட சிலருக்கும் இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 03.04.2021 அன்று இரவு காளிதாஸ் வீட்டின் முன் அழகுபாண்டி உள்ளிட்ட கும்பல் அரிவாள், மரக்கட்டைகளுடன் திரண்டு, அங்கிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தி வேனுக்குத் தீ வைத்தனர். இதைத் தடுக்க முயன்ற காளிதாஸ் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து, எரிந்துகொண்டிருந்த வேனுக்குள் தூக்கி வீசினர். இதில் பலத்த தீக்காயமடைந்த காளிதாஸ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 08.06.2021 அன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துக் கடல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அழகுபாண்டி, மாரிசாமி, சதீஷ்குமார், பாண்டீஸ்வரன், மனோஜ் ஆகிய 5 பேருக்குக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை, தலா ரூ.10,000 அபராதமும், பொதுச் சொத்துகள் சேதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியான முருகனுக்குக் கொலை வழக்கில் மட்டும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அன்புராஜ், தமிழரசன் ஆகிய இருவர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.