கோயம்புத்தூர் செல்வபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அரங்கில் நவீன ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 'டி.எம்.பி. அறக்கட்டளை' சார்பில் ரூ.11.61 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாடப் புத்தகக் கல்வி மட்டுமின்றி கலை, கலாசாரம் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கவும், அவர்களின் தனித்திறன், தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் அரங்கத்திற்குப் புதிய ஒலியமைப்பு உபகரணங்களைப் பொறுத்துவதன் மூலம், மாணவர்கள் தங்களது கலைத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவிக் காசோலையை, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் இயக்குநர் வின்சென்ட் மெனச்சேரி தேவஸ்ஸி, பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் ஆர். சீனிவாசனிடம் நேரில் வழங்கினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார், டி.எம்.பி. அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், துணைத் தலைவர் டி. இன்பமணி,தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கோயம்புத்தூர் பிராந்திய மேலாளர் வசீகரன், பள்ளியின் பொருளாளர் ஏ. சண்முகம்உள்ளிட்ட முக்கியப் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் டி.எம்.பி. அறக்கட்டளை பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.