தூத்துக்குடியில் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் விண்வெளித் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்கும் நோக்கில், கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள் செயற்கைக்கோள் உருவாக்கும் பயிலரங்கம் கோலாகலமாகத் தொடங்கியது.

பள்ளியின் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான எக்ஸ். ஹெலன் ஃப்ளோரா பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

'ப்ரொபெல்லர் டெக்னாலஜீஸ்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இப்பயிலரங்கில், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் சல்மான் மற்றும் உதவிப் பயிற்றுநர் டெனிஷ் ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.

இப்பயிலரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 70 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். செயற்கைக்கோள் உருவாக்கும் நேரடிப் பயிற்சி மூலம் மாணவர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்களை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

இப்பயிற்சி மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன், குழு ஒருங்கிணைப்பு மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், அனுபவம் சார்ந்த கற்றல் மற்றும் அறிவியல் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளி முதன்மை வகிப்பதை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.