கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்துத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். இக்காலகட்டத்தில் அவர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, 2006-இல் அமைந்த திமுக ஆட்சிக் காலத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சொத்துக்களைக் குவித்ததாகத் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்புச் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் இன்று (நவம்பர் 3) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை இவ்வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து உத்தரவிட்டார். இவ்வழக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது.