தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அம்ருத் 2.0 (AMRUT 2.0) திட்டத்தின் கீழ் பல்வேறு வார்டுகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சியின் 15, 16, 17, 18, 49 மற்றும் 50 ஆகிய வார்டுகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.பிரியங்கா இன்று (அக். 15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஆணையாளர் தெரிவித்ததாவது: "இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகள் தற்போது 98% முழுமையாக முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டப் பணிகள் (Trial Run) வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. எஞ்சியுள்ள பணிகள் 100% முழுமையாக நிறைவடைந்ததும், வரும் நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கான கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநகராட்சி நிர்வாகத்தால் வெளியிடப்படும். அதன் பின்னர், பொதுமக்கள் தங்களது வீட்டு கழிவுநீர் இணைப்புகளைப் பாதாளச் சாக்கடை அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர், மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் திட்ட ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

