தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகிலுள்ள கீழசெய்த்தலை கிராமம் நடுத்தெருவில் வசிப்பவர் வேல்முருகன்; பழையகாயலில் உள்ள மீன் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (30). இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்ததால், ராஜலட்சுமி வீட்டிற்குள் துணி துவைத்து, கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பியின் மேல் துணியைக் காயப்போட்டுள்ளார். அப்போது கீழே இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மீது துணி பட்டதில் மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் ராஜலட்சுமியைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

