தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கீழநைனார் தெருவைச் சேர்ந்தவர் அகமது மைதீன் (45). இவர் காயல்பட்டினம் பஜாரில் செருப்புக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையைப் பூட்டிவிட்டு 11 மணியளவில் கீழநைனார் தெருவில் உள்ள தனது குடோனுக்குச் சென்று செருப்புப் பண்டல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அரிவாளுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், திடீரெனக் குடோனில் புகுந்து அகமது மைதீனை அரிவாள் முனையில் மிரட்டியுள்ளனர். அவரிடமிருந்து ரூ. 20,000 ரொக்கப் பணத்தைப் பறித்துக் கொண்டு, வெளியே தயாராக இருந்த 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அகமது மைதீன் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவில் பிள்ளை வழக்குப் பதிவு செய்தார். உதவி ஆய்வாளர் சுந்தரம் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் காயல்பட்டினம் கலாம் சாகிப் கம்பி தோட்டத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (26), சீதக்காதி நகரைச் சேர்ந்த சேக் சுலைமான் (22), அதே பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் (20) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரும் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.