தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து குறைவான நாட்டுப்படகு மீனவர்களே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்குத் திரும்பிய நிலையில், கடலில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்பாடு குறைவாகவே இருந்தது.

வழக்கமாகச் சனிக்கிழமைகளில் மீன்களை வாங்கப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதும். ஆனால், நேற்று காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்த மழை காரணமாகப் பொதுமக்களின் கூட்டம் சற்று குறைவாகக் காணப்பட்டது. அதேநேரம், கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைந்ததால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

கடந்த வாரம் கிலோ ரூ. 1,500-க்கு விற்கப்பட்ட சீலா மீன் நேற்று கிலோ ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. விளைமீன், பாறை, ஊழி ஆகிய மீன்கள் கிலோ ரூ. 400 முதல் ரூ. 600 வரையும், நண்டு கிலோ ரூ. 1,000 வரையும், அயிலை மீன் கிலோ ரூ. 250 வரையும், கேரை மீன் கிலோ ரூ. 230 வரையும், சாளை மீன் கூடை ரூ. 2,000 வரையும் விற்பனையானது. மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்ட நிலையிலும் ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.