நெல்லை 9வது சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பங்கஜ் நாராயணன் ஆலோசனையின்பேரில் குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., மாணவ, மாணவிகள் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்து நிகழ்ச்சியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் காமராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் விஜயராகவன் பனை விதைகளை விதைத்தார்.

தொடர்ந்து, தேசிய மாணவர் படையை சேர்ந்த 85 மாணவ, மாணவிகள் 2 குழுக்களாக பிரிந்து, ஏரல் முதல் குரங்கணி வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பள்ளி செயலாளர் முருகன், தலைவர் ராஜசேகரன், பொருளாளர் மோகன், ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலா தேவி மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் ராஜகுமார், ஜே.சி.ஓ., ஜெகத்சிங் ஆகியோர் செய்திருந்தனர்.