தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் இன்று (சனிக்கிழமை, நவம்பர் 28) மாவட்ட நிர்வாகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும் குறித்த 'பண்டைய காலம் - காலனிய காலம் - தற்காலம்' பன்னாட்டு ஆய்வு மாநாடு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 'தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும்' என்ற நூலை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் இயக்குநர் முனைவர் அ. வெளியப்பன் பெற்றுக் கொண்டார். கட்டுரைகளைச் சிறப்பாக வாசித்த மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்: பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை (சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது) மற்றும் கொற்கை ஆகிய இடங்கள் பழமையான நாகரிகத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன. புன்னைக்காயலில் 1578–79-இல் தமிழின் முதல் அச்சகம் தொடங்கப்பட்டது; கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார் ஆகியோர் இம்மண்ணின் மைந்தர்கள்.

இலக்கியத்தைத் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் ரீதியாக உறுதி செய்கின்றன. தொல்லியல் தளங்களைப் பாதுகாப்பதும் புதிய அகழாய்வுகளைத் திட்டமிடுவதும் அவசியம். மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, கப்பல் கட்டுமானம், குலசேகரப்பட்டினம் விண்வெளித் தளம் மற்றும் துறைமுக விரிவாக்கம் எனப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மாவட்டத்திற்கு வரவுள்ளன.

வரலாற்றை ஆவணப்படுத்துதல், வளர்ச்சியும் பாரம்பரியமும் இணைந்து செல்லுதல் மற்றும் இளைய தலைமுறையினர் வரலாற்றைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று பொறுப்புகளும் நம்மிடம் உள்ளன. மாவட்டத்தின் சொந்த ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதியுள்ள இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், கல்லூரி முதல்வர் முனைவர் மா. முருகானந்தம், எழுத்தாளர்கள் ச. தமிழ்செல்வன், முத்தாலங்குறிச்சி காமராசு, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் இரா. சேதுராமன், முனைவர் மு. பவானி, எட்டையபுரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, செயல் அலுவலர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.