திருச்செந்தூர் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள அமலி நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா தல்மேதா மகன் குணசேகரன் (62). மீனவரான இவர், இன்று ( நவ.28) அதிகாலை சக மீனவர்கள் மூவருடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
கரையிலிருந்து சுமார் 5 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் எதிர்பாராத விதமாகக் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், திருச்செந்தூர் கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

