தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (நவம்பர் 28) தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தருவதையொட்டி, விமான நிலையம் முதல் அபிராமி மஹால் வரை பிரதான சாலைகளில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் வட்ட வடிவிலான வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி விமான நிலையம் தொடங்கி 3-வது மைல் மேம்பாலம், தமிழ் சாலை, வ.உ.சி. சாலை வழியாக அபிராமி மஹால் வரை சாலையின் இருபுறமும் மற்றும் நடுவிலும் ஏராளமான டிஜிட்டல் பேனர்கள், கொடிக்கம்பங்கள் மற்றும் வட்ட வடிவிலான வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வட்ட வடிவிலான வரவேற்பு பேனர்கள் வாகன ஓட்டிகளின் கண்களைப் பதம் பார்ப்பதாகவும், வளைவுகளில் எதிர்புறம் வரும் வாகனங்கள் தெரியாமல் மறைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் இது போன்ற வட்ட வடிவிலான பேனர்களை வைக்கக் காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்றும், சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.