தமிழ்நாடு அரசின் மழைநீர் சேமிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பு உள்ளதா என மாநகராட்சி குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், விழிப்புணர்வு வில்லைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வெளியிட்டார்.

இது குறித்துத் தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மழைநீர் சேமிப்பு குறித்துப் பல்வேறு நிலைகளிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மூலம், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்யும் கள ஆய்வுப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வில்லைகள் (Stickers) மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடும் நிகழ்வு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின்போது பேசிய மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, "மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவீதம் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.