தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரது மகன் கமலேஷ் (20). இவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து முன் சக்கரத்தைத் தூக்கியும், வேகமாகப் பின்னோக்கித் திரும்பியும், பின் சக்கரத்தைத் தூக்கியும் பல்வேறு சாகசங்களைச் செய்து, அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார், கமலேஷ் வெளியிட்ட வீடியோவை ஆய்வு செய்து பைக் பதிவு எண்ணைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.

செய்யப்பட்டபோது கமலேஷின் கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. போலீசாரின் விசாரணையில், 'ரீல்ஸ்' எடுத்தபோது பைக்கிலிருந்து கீழே விழுந்து தனது இடது கை முறிந்துவிட்டதாகக் கமலேஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இளைஞர்கள் யாரும் பைக் சாகசங்களையோ அல்லது வேறு எந்தச் சாகசங்களையோ வீடியோ எடுத்து 'ரீல்ஸ்' வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு 'ரீல்ஸ்' வெளியிடும்போதுதான் தனது இடது கை முறிந்துவிட்டது என்றும் கமலேஷ் பேசிய விழிப்புணர்வு வீடியோவைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.