சட்டங்களால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை ஒழிக்க முடியாது என்றும், குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைப்பதன் மூலமும், சமூகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டாலும் மட்டுமே இதனை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டுத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 27) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் டெவலப்மென்ட் (PAD) அமைப்பு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் திருமண ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது: "சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. சட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை ஒழித்துவிட முடியாது. இந்த அறப்போரில் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, திருமணச் சடங்குகளை நடத்தி வைக்கும் அனைவரும் குழந்தைத் திருமணத்திற்குத் துணை நிற்கவோ அல்லது அதில் பங்கேற்கவோ மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும்போதுதான், நாம் இதனை முழுமையாக ஒழிக்க முடியும். மேலும், குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவார்ந்த சமுதாயம் உருவாவதன் மூலமே குழந்தைத் திருமணம் போன்ற சமூக அவலங்களை ஒழிக்க முடியும். ஆகவே, குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்."
இதனைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் டெவலப்மென்ட் (PAD) நிறுவனத்தின் நிறுவனர் லூசியல் ஜாய், செயல் இயக்குநர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், திட்ட மேலாளர் ராம்கி உள்ளிட்ட நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

