ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், இதில் தொடர்புடைய மர்மநபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : "ஈரோட்டில் தலைவர் கருணாநிதி உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாட்டின் நவீன சிற்பி எனப் போற்றப்படும் கருணாநிதியின் உருவச்சிலைகள் தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மொடக்குறிச்சி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது உருவச்சிலைகளை மர்மநபர்கள் தகர்க்க முயலும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ஒவ்வொரு தி.மு.க உடன்பிறப்பையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அவரது சிலைகளைத் திட்டமிட்டுச் சேதப்படுத்தும் மர்மநபர்களை உடனடியாகக் கைது செய்து, இதன் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மேலும், "தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக விரோதக் கும்பல்களுக்குப் போலீஸ் மீதான பயம் அறவே நீங்கிவிட்டதையும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும் உணர்ந்து த.வெ.க அரசு செயல்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.