தூத்துக்குடி மடத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பரிசுத்தராஜ் மகன் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் (27). அஞ்சல் துறையில் பணியாற்றி வந்த இவருக்குக் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் இருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு ஆண்ட்ரூஸ் பால்ராஜ் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரது சகோதரி அறைக்கு வெளியே வந்து பார்த்தபோது, கை மணிக்கட்டு மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது சுயநினைவு திரும்பிய ஆண்ட்ரூஸ் பால்ராஜ், தான் ஆசிட் குடித்துவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.