தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டடங்கள், சமுதாய நலக் கூடம், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி தெய்வச்செயல்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் ரூ.6.84 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், வடக்கு காரசேரி ஊராட்சியில் இயற்கை பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நல கூடத்திற்கான கட்டடத்தினையும்,

செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை நிதியின் கீழ் ரூ.12.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடம் மற்றும் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், கீழசெக்காரக்குடி மற்றும் நடுச்செக்காரக்குடியில் 15 - ஆவது நிதிக்குழு மானியம் நிதியின் கீழ் தலா ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தெய்வச்செயல்புரம் மற்றும் நடுவச்செக்காரக்குடி கிராமத்தில் பொது விநியோக் கடையில் உணவுப் பொருட்களின் தரம், இருப்பு குறித்தும், வடக்கு காரசேரி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்தர ஆய்வகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், தெய்வசெயல்புரம் ஊராட்சிமன்ற அலுவலம், கிராம நிர்வாக அலுவலகத்தின் அலுவலக நடைமுறைகள், பதிவேடுகளையும், கீழச்செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பணிகள் குறித்தும்,

கீழபூவாணி கிராமத்தில் வளரும் பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் கீழ் (VB GRAM) பணியாளர்கள் கீழபூவாணி காட்டோடையினை ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் பணி மேற்கொண்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தெய்வச்செயல்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு காரசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் வைப்பறை, அடிப்படை வசதிகள், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், மாவட்ட சுகாதார அலுவலர் (தூத்துக்குடி) யாழினி, ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர் இளஞ்சேரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் – தெற்கு) சந்திரசேகர், உதவி பொறியாளர் அருணா பிரதாயினி, கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த சுப்புலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சியம்மாள், சந்தன ராஜேஷ், ஆயிஷா, துணை ஆட்சியர் (பயிற்சி) மனோபார்கவி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.