தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.11.2026), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் இணைந்து நடைபெற்ற சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் இரண்டாம் கட்ட முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் கூடிய ரூ.31.14 கோடி திட்ட மதிப்பிலான வங்கி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான இலக்கை விரைந்து எய்தும் நோக்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழிற் கடனுதவியைப் பெறுவதற்கு உதவி செய்யும் கடன் வசதியாக்கல் முகாமை ஒவ்வொரு மாதமும் நடத்த உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நவம்பர் மாதத்திற்கான கடன் வசதியாக்கல் முகாமிற்கு ரூ.125.00 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.176.09 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மூலம் செயல்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) மூலம் 09 பயனாளிகளுக்கு ரூ.21.17 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.84.66 இலட்சம் கடனுதவியும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.9.77 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.39.09 இலட்சம் கடனுதவியும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.82.03 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.69 கோடி கடனுதவியும்,
கலைஞர் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (TWEES) கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.41.69 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.1.75 கோடி கடனுதவியும், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.15.13 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.43.24 இலட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் கூடிய ரூ.31.14 கோடி திட்ட மதிப்பிலான வங்கி கடன் ஆணைகளை வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதாவது 81 பயனாளிகளுக்கு 1.70 கோடி மானியத்துடன் கூடிய ரூ.6.11 கோடி திட்ட மதிப்பிலான கடன் ஆணைகளும், வங்கிகள் மூலம் நேரடி MSME கடன் ஆணையாக 1 நிறுவனத்திற்கு ரூ.25 கோடி கடன் ஆணைகளும், இன்றைய முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசிலீக்கப்பட்டு 1 நபருக்கு 0.75 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.3 இலட்சம் திட்ட மதிப்பிலான வங்கி கடன் ஆணைகளும் ஆக மொத்தமாக 83 பயனாளிகளுக்கு ரூ.31.14 கோடி திட்ட மதிப்பிலான ரூ.1.71 கோடி மானியத்துடன் கூடிய கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

