தூத்துக்குடி அருகே உள்ள மிளகுநத்தம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சண்முகச்சாமி மகன் மொட்டைசாமி (37). இவரது மனைவி ராஜபொம்மு (34). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மொட்டைச்சாமி புளியமரத்து அரசடி பகுதியில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தார்.

இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்வதும், வீட்டிலுள்ள பொருட்களைச் சேதப்படுத்துவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் மது போதையில் வந்த மொட்டைச்சாமி, மனைவி ராஜபொம்முவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளார்.

கணவரின் செயலைக் கண்டு அச்சமடைந்த ராஜபொம்மு, வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, மொட்டைசாமி தனது வீட்டின் முன்பகுதி மேற்கூரையில் இருந்த மின்விசிறி கொக்கியில், குழந்தைகள் விளையாடுவதற்காகச் சேலையால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் மொட்டைச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மொட்டைசாமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.