வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தித் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கயத்தாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வுப் பேரணியைத் தேர்தல் வட்டாட்சியர் பொன்னம்மாள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் தேர்தல் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பிக்கொண்டு கயத்தாறின் முக்கிய ரதவீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.