கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை தாலுகா பள்ளம், புதியதுறை பகுதியைச் சேர்ந்த கிளிட்டஸ் மகன் சஜின் (29). இவரும், திருவனந்தபுரம் புல்லுவிளை அஞ்சல் தலையீட்டு விளாகம் பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் மெர்லின் தாஸ் (23) என்பவரும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் லோடு ஏற்றிக்கொண்டு, பொலிரோ பிக்கப் வாகனத்தில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

வாகனத்தை சஜின் ஓட்டினார். அதேநேரத்தில், தூத்துக்குடி சரவணபுரம் ஒட்டரசுப்பட்டியைச் சேர்ந்த மூக்கையா மகன் சதீஷ்குமார் (38) என்பவர், புதிய துறைமுகத்திலிருந்து டிப்பர் லாரியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு அனல்மின் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி கேம்ப்-1 பாலத்தின் மீது சென்றபோது, சஜின் ஓட்டிச் சென்ற பொலிரோ பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ஓட்டுநர் சஜின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், உடன் பயணித்த மெர்லின் தாஸ் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தெர்மல் நகர் போலீசார், காயமடைந்த மெர்லின் தாஸை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த சஜினின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்துத் தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.