மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைத் தரக்குறைவாக விமர்சித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், விளாத்திகுளம் பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலருமான குறிஞ்சி பேசுகையில், "கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்குத் திமுகவினர் தற்போது குதித்து வருகின்றனர். அந்த எம்.எல்.ஏ. செய்தது தவறுதான்; அதனை நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், விளாத்திகுளம் திமுகவைச் சேர்ந்தவர்கள் இதே விளாத்திகுளம் பேரூராட்சி பெண் கவுன்சிலருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினர். இந்தப் பிரச்சினை தொடர்பாக அன்றே விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் அந்தப் பெண் கவுன்சிலர் புகார் தெரிவித்தார். ஆனால், இந்தப் புகாரை திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கண்டுகொள்ளவில்லை. உங்களுக்கு வந்தால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வந்தால் குதிக்கிறீர்கள்" எனக் கடுமையாக விமர்சித்தார்.
விளாத்திகுளம் பேரூராட்சியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், அதில் 7 பேர் பெண் கவுன்சிலர்கள் ஆவர். அந்த 7 பெண் கவுன்சிலர்களில் யாருக்கு, எந்தத் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்ற கேள்வி தற்போது விளாத்திகுளம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

