தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்பட்ட சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில், வேளாண்மைத் துறை சார்பில் விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூண்டை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 26) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பன்றிகளால் விவசாய பயிர்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் (CSR Fund) பயன்படுத்தி கோவில்பட்டி (லிங்கம்பட்டி, சின்னமலைக்குன்று), புதூர் (அயன்கரிசல்குளம்), விளாத்திகுளம் (படர்ந்தபுளி), கருங்குளம் (சிங்கத்தாக்குறிச்சி), ஸ்ரீவைகுண்டம் (இருவப்பபுரம்),

கயத்தாறு (சவளப்பேரி) மற்றும் ஒட்டப்பிடாரம் (கீழக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி) ஆகிய 7 வட்டாரப் பகுதிகளில் சோதனை அடிப்படையில் 9 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை துறையின் மூலம் விவசாய சங்கங்களின் ஆலோசனைப்படி பன்றிகள் அதிகம் உள்ள வயல்வெளி பகுதிகளில் இக்கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதில் பயிற்சி பெற்ற மற்றும் திறமையான நபர்களைக் கொண்டு அவற்றைப் பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளஞ்சேரன் மற்றும் துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.