தமிழ்நாடு அரசால், உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றும் வகையில் சிறப்பான வீரதீரச் செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பாராட்டி, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “அண்ணா பதக்கம் – வீரதீரச் செயல்களுக்கான விருது“ வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2027 ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் பெறுவதற்கு, உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க வீரதீரச் செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதற்கான உரிய ஆதாரங்களுடன் கூடிய பரிந்துரைகள் ஆங்கிலம் மற்றம் தமிழில் தனித்தனியாக, அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் தெளிவாகத் தயாரிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 08.12.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, விருதிற்கு தகுதியுடைய நபர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 07.12.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி – 628 101 என்ற முகவரியை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.