தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி மாரியம்மாள் (44). கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டு பீரோவில் இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி பீரோவைத் திறந்து பார்த்தபோது அந்தத் தங்கச்சங்கிலி காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மாரியம்மாள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தனலட்சுமி என்ற பாத்திமாவை (38) பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தங்கச்சங்கிலியைத் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, தனலட்சுமி என்ற பாத்திமாவிடமிருந்து இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

