தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், இவருக்கும் இவரது மனைவி சத்தியசீலிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சத்தியசீலியை, முனியசாமி அவதூறாகப் பேசித் தாக்கியதாகத் தெரிகிறது. சத்தியசீலியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் முனியசாமியைக் கண்டித்ததையடுத்து, அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சத்தியசீலி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து, நேற்று சத்தியசீலி அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய முனியசாமியைக் கைது செய்தனர்.