திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் உச்ச நீதிமன்ற நீதிபதி விபுல் எம். பஞ்சோலிக்கு மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "திருக்கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவைச் செயல்படுத்தாமல், வழக்கம்போல் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் சஷ்டி மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்."

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. ஜெயக்குமார், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியிருப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். அப்போது, மாநில இந்து முன்னணி நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன், தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வழக்கறிஞர் பஞ்சாப் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.