தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் மகன் சுரேஷ் (34). இவரது மனைவி சோமசுந்தர லட்சுமி. இவர்களுக்கு ஷியாம் சுந்தர் (6) என்ற மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சுரேஷ், நயினார்புரத்தில் உள்ள தனது மாமனார் முருகன் வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். தற்போது தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சர்வேயராகப் பணியாற்றி வந்த சுரேஷ், தூத்துக்குடியில் உள்ள ஹோட்டல் முன்பு ஆவின் டீ கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
சென்னையிலிருந்து ஊருக்கு வந்த பிறகு வருமானம் குறைவாக இருப்பதாகக் கூறி குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் கடையை அடைத்துவிட்டு, சுரேஷும் அவரது மனைவி சோமசுந்தர லட்சுமியும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வீட்டிற்கு வந்ததும் குளிப்பதற்காக மாடியில் உள்ள தங்களது அறைக்குச் சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்குக் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி மாடிக்குச் சென்று பார்த்தபோது, அறையிலிருந்த மின்விசிறியில் சுரேஷ் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
சப்தம் கேட்டு ஓடிவந்த அவரது மாமனார் மற்றும் மனைவி சேர்ந்து சுரேஷைக் கீழே இறக்கினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்தபோது சுரேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த புதியம்புத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

