தூத்துக்குடி மாநகராட்சி 55-வது வார்டுக்குட்பட்ட அத்திமரப்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அத்திமரப்பட்டி பிரதான சாலையில் கடந்த பல மாதங்களாகவே குண்டும் குழியுமாக ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சாலை வழியாகத் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் அவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், அத்திமரப்பட்டி பிரதான சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பதே தெரியாத அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பல மாதங்களாகப் பிரதான சாலை சீரமைக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பெரும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன்பாக, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அத்திமரப்பட்டி பிரதான சாலையை நேரில் ஆய்வு செய்து, ஆபத்தான பள்ளங்களைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

