தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டு வரும் குடிநீர் குடிக்க முடியாத அளவுக்குத் துவர்ப்பு சுவையுடனும், உப்பு நீர் போலவும் வருவதாக மாநகராட்சியின் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் (அ.இ.அ.தி.மு.க) குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : "கடந்த மாதம் முதல் இப்போது வரை மாநகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிக்க முடியாத துவர்ப்பு (உப்பு) நீர் போல் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் இருக்கும் 4 குடிநீர் உறிஞ்சும் மோட்டார்கள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் வந்தால் இப்படி ஆகாது.
கோடை காலத்தைச் சமாளிக்க வேறு போர்கள் (ஆழ்துளைக் கிணறுகள்) போட்டு, அதையும் ஆற்றுக் குடிநீர் கிணற்றிலோ அல்லது குடிநீர் சேமிப்புத் தொட்டியிலோ கலந்ததால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளருக்கு ஆர்.ஓ குடிநீர் வசதி இருப்பதால் இந்த உண்மை நிலை அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. யாருக்குத் தெரியப்படுத்தி இதைச் சரி செய்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "மாநகராட்சி மேயர் அவர்கள் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையக் கிணற்றில் குடிநீர் பொறியாளர் மூலம் ஆணையாளரை அழைத்துச் சென்று கள ஆய்வு செய்து, குடிநீர் கலங்கல் மற்றும் சுவையின்மை மாறிய நிலையை உடனடியாகச் சீர் செய்திட வேண்டும். இல்லையெனில் மாவட்ட அமைச்சர் தலையிட்டு ஆணையாளருடன் கள ஆய்வு செய்து இன்றே இப்பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்" என அந்தோணி கிரேஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தரம் குறித்துப் பொதுமக்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

