தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் மற்றும் பட்டினமருதூர் கிராமங்களில் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) இணைந்து செயல்படுத்தி வரும் மீனவர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அனுபவப் பகிர்வு ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

கடலோர மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், TMB அறக்கட்டளை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) இணைந்து கீழவைப்பார், பட்டினமருதூர் கிராமங்களில் செயல்படுத்தி வரும் முன்னோடித் திட்டத்தின் அனுபவங்கள் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

கடந்த ஜனவரி 2026-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சிறு மீனவர்களின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாதுகாப்பு உபகரணங்கள், மீன் உலர்த்துதல் மற்றும் பதப்படுத்துதல் கருவிகள், மாற்றுத் தொழில் வாய்ப்புகள் மற்றும் கிராமப் பொதுவசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராம அளவிலான மேலாண்மைக் குழுக்கள் மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு, குடும்பப் பொறுப்பைத் தனியாக ஏற்றுள்ள பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற இரு கிராமங்களின் பிரதிநிதிகள், இத்திட்டத்தால் தங்களது தொழில் மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, திட்டப் பணிகள் குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டு, மீனவக் குடும்பங்களின் பங்களிப்பை விளக்கும் ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில் MSSRF மீன்வளம் மற்றும் வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் வேல்விழி, TMB அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் முத்தையா ஆகியோர் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசினர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டாக்டர் சரவணன், வாழ்வாதாரம், சமூக நலன் மற்றும் அரசுத் திட்டங்களின் பயன்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மீன்வளப் பல்கலைக்கழகம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், NETFISH–MPEDA, HCL அறக்கட்டளை, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, இத்திட்டத்தைப் பிற கடலோரக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.